Saturday, August 29, 2009

வரலாற்று பதிவு - 1

10-08-1983

1980-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை அண்ணா நகர் தோகுதியில் இருந்து கருணாநிதியும், புரசைவாக்கம் தொகுதியில் இருந்து அன்பழகனும் சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

ராஜினாமா
இலங்கை தமிழர் பிரச்சனையில், மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்து, கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ராஜினாமாவை விளக்கி இருவரும் ஒரு அறிக்கை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

(1) இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் நடைபெற்றுள்ள தமிழ் இனப் படுகொலை குறித்து, இதுவரையில் இந்திய அரசின் தலைமை அமைச்சரோ அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மையுள்ள நாடாளுமன்றமோ ஒரு கண்டனத்தைக்கூட அறிவிக்கவில்லை.

ராணுவம்
(2) இலங்கை தமிழர்களை படுகொலையில் இருந்து பாதுகாக்கவும், அவர்களுக்கு ஒரு நிரந்தரமான நிம்மதியான வாழ்வளித்திடவும் உடனடியாக முடிவுகளை மேற்கொண்டு இந்திய ராணுவத்தை அனுப்ப தவறியது மட்டுமல்லாமல், எத்தனையோ வெளிநாடுகளுடைய பிரச்சனைகளை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு அதன் கவனத்தை ஈர்த்த இந்திய அரசு, இலங்கை தமிழர் பிரச்சனையில் அந்த முறையை எவ்வளவோ கோரிக்கைகளுக்கு பிறகும் ஏற்க மறுத்துவிட்டது.

(3) ஐ.நா.மன்றத்தின் (செக்யூரிட்டி கவுன்சில்) பாதுகாப்பு சபையில் வலியுறுத்தி, உடனடியாக பாதுகாப்பு சபையின் சார்பில் அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி, தொடர்ந்து நடைபெறும் படுகொலைகளை தடுத்து நிறுத்த இந்திய அரசு தனது அக்கறையற்ற தன்மையின் காரணமாக தவறிவிட்டது.

நரசிம்மராவ்
(4) இந்திய வெளியுறவு துறை அமைச்சர் நரசிம்மராவ் இலங்கைக்கு சென்றபோது, தமிழர் தலைவர்களை சந்திக்க இயலாத ஒரு நிலை ஏற்பட்டதோடு, தமிழ் அகதிகள் லட்சக்கணக்கில் அடைபட்டு அவதியுறும் அகதிகள் முகாமிற்கே செல்ல முடியாமல் திரும்பக்கூடிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயின் சகோதரர் இந்தியாவிற்கு வருகை தந்து இந்திய அரசிடம் இலங்கையின் நிலைமைகளை சிங்களவர் சார்பில் விளக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையில் உள்ள தமிழர்களின் தலைவர்கள் இந்தியாவிற்கு அழைக்கப்பட அல்லது இந்திய அரசு வலியுறுத்தி அந்த தமிழர் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்து இலங்கையின் நிலவரங்களை விவரிக்கின்ற சூழ்நிலையை உருவாக்குதின் மூலம் உண்மை நிலவரங்களை அறிய இந்திய அரசு முயற்சி மேற்கொள்ளாததாலும், அப்படி ஒரு முயற்சியை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டுமென்று நமது தமிழ்க அரசு இந்திய அரசை வலியுறுத்தாததும் பெரும் குறையாகும்.

உணவு
5) இலங்கையில் அகதிகளாக உள்ள லட்சக்கணக்கான தமிழ் மக்கள் முறையான கவனிப்பின்றி மேலும் மேலும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகின்ற நிலைமையும் அவர்களுக்கென அனுப்படுகிற உணவு வகைகளோ, ஏனைய மருந்து போன்ற பொருட்களோ அவர்களுக்கு போய்ச்சேராமல் சிங்கள ராணுவத்திற்கு போய் சேருகிறது என்ற கொடுமையை சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் மற்ற அமைப்புகளும் சுட்டிகாட்டியும் அந்த பொருட்களும், நிதியும் தமிழர்களுக்கு போய்ச்சேர மத்திய - மாநில அரசுகள் முயற்சி எடுக்கவில்லை.

கண்டன தீர்மானம்
(6) இலங்கை பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் தமிழர்களை காப்பாற்றக்கூடிய கண்டனத் தீர்மானம் ஒன்று கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்.கணேசன், வை.கோபாலசாமி இருவரும் மேற்கொண்ட உண்ணா நோன்பின் உணர்வை புரிந்து கொள்ளாமல், இதுவரையில் இந்திய அரசு அப்படி ஒரு தீர்மானத்தை பாராளுமன்றத்தில் இதுவரை தெரிவிக்காதது வருத்தத்திற்குரியது.

(7) தமிழ் நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் நண்பர் நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தியாக பயணத்தில் செல்பவர்களை இந்திய அரசு இடையிலேயே தடுத்துவிடும் என்ற செய்தியை இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா வெளியிடுகிற அளவிற்கு இங்குள்ள மாநில அரசு காவல் துறையும், மத்திய அரசு காவல் துறையும் இலங்கையோடு தங்களுக்குள்ள நேசத்தை வெளிகாட்டியிருப்பது பெரும் வேதனைக்குரியது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ராசாராமுக்கு அனுப்பிவிட்டதாக கருணாநிதி தெரிவித்தார்.

No comments: