Sunday, April 4, 2010

அங்காடித் தெரு... இளமையில் வறுமை...

நான் பெரும்பாலும் திரைப் படங்கள் பார்ப்பதில்லை... நண்பர் லக்கிலுக்யின் வலைதளத்து விமர்சனமும், நண்பர் அக்னிப்பார்வை தூண்டிய ஆர்வமும்... அங்காடித் தெருவை நோக்கி செல்ல வைத்தது...

நான் சென்னையில் முதன் முதலில் பயிற்சிக்காக சென்னை கலைஞர் நகர் போக்குவரத்து பணிமனையில் இருந்த அலுவலகத்திற்கு செல்லும் போது... உதயம் திரையரங்கம், தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை ஒட்டிய சாலை ஓரங்களில் பல குடும்பங்கள் வாழ்வதை கண்டுள்ளேன்...
எனது பணி இரவு நேர பணி மாலை 6:30 - 7 மணிக்குள் வேலைக்கு சென்று... காலை 7 மணிக்கு அலுவகத்தில் இருந்து வீட்டிற்கு வருவது வழக்கம்.
மாலை அலுவலகம் செல்லும் போது சாலையோரத்தில் வாழும் மனிதர்கள் குளித்து முடித்து சமைத்து கொண்டிருப்பார்கள்... மாலை வேலை முடிந்து அரிசி மற்றும் சமையல் பொருளோடு வரும் அவர்கள் காலை 7 மணிக்கு கட்டிட வேலைகான உபகரணங்களோடு பேருந்தில் செல்வார்கள்...
மழைக் காலத்தில் சாலையோர மக்கள் தூங்க ஒண்டும் இடம் கலைஞர் நகர் பேருந்து நிலையம். எனக்கு அதிகாரியாக இருந்த கிளை மேலாளருக்கு உயர் அதிகாரியானவர்... சலையோர மக்களை பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்க கூடாது என காவல் பணியில் இருப்பவர்களுக்கு சொல்ல போவதாக... சொன்ன போது... அரசு இடத்தில் கூட அனுமதிக்கா விட்டால்... மழையில் குழந்தைகளோடு அவர்கள் எங்கு போய் தங்குவார்கள் கேட்டேன்... அவர் சொன்னார்... அவர்களை உள்ளே விட்டால் நிரந்தரமாக தங்கி விடுவார்கள் என சப்பை காரணமும் சொன்னார்...
சென்னையில் நிறைய வீடுகளை கட்டும் அவர்களுக்கு ஒரு கூரை கூட இல்லை என என் நண்பரிடம் வருந்தியிருக்கிறேன்... பின்னர் அந்த சலையோர மக்களை பற்றி கேட்ட போது... அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள்... பிழைப்பிற்காக இங்கு வந்திருப்பதாக சொன்னார்கள்...
1998 மே... மாதம் சென்னை உதயம் அரங்கத்தின் ஓரத்தில் தூங்கி கொண்டிருந்த மக்களின் மேல் லாரி ஏறி... 7 பேர் உயிர் இழந்த செய்தி... அந்த சலையோர... உழைக்கும் மக்களின் உயிருக்கு என்ன மரியாதை என தெரிந்தது...
இந்த சம்பவம் அங்காடித் தெரு படத்தில் ஆரம்ப காட்சியாக்கப் பட்டிருந்தது

சென்னை தியாகராய நகர், அரங்கநாதன் தெருவில் 20 ஆண்டுகளுக்கு முன் இருந்த பல கடைகள் காலியாகி ஒரு சில பெரிய நிறுவனங்களின் ஆக்கிரமைப்பு நடைபெற்றது... கடந்த 15 ஆண்டுகளின்...

சில முன்னணி நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எல்லாம் நெல்லை தமிழில் உரையாடுவதை கண்டு... நெல்லை பகுதி நண்பர்களிடம் 10 ஆண்டுகளுக்கு கேட்ட போது... அவர்கள் எல்லோரும் திருசெந்தூர், உடன்குடி, குலசேகரம், ஏரல் பகுதிகளில் அழைத்து வரப் படுவதாக சொன்னார்கள்...

இந்த படத்தில் இருக்கும் சில காட்சிகள்... நெருடலான உண்மைகள்...

சென்னை முன்னணி நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு செய்யும் போது... ஒரு அண்ணாச்சி... இன்னொரு அண்ணாச்சியிடம் சொல்வார்... நம்ம பயலுவலா, அப்பா-அம்மா இல்லாத, சகோதரிகள் உடைய பயலுவலா எடுங்க வேண்டும்... அப்பதான் பொத்திகிட்டு வேலை பாப்பானுவ...

வேலைக்கு வரும் தொழிலாளர்களிடம்... சீருடைக்கு 250 ரூபாய் வாங்கி கொள்ளும் நிர்வாகம்...

ஆண் தொழிலாளர்களிடம் கன்னத்தில் அடித்தும், காலால் மிதித்தும், பெண் தொழிலாளர்களை பாலியல் கொடுமை செய்து தண்டனை நிறைவேற்றும் விசுவாசமான மேற்பார்வையாளர்கள்... படத்தில் முடிவில் அவன் அப்படித்தான் செய்வான் என பாலியல் கொடுமைகளை சரியெனும் அண்ணாச்சி...

10 ரூபாய்க்கு சட்டை தயாரிக்கும் தந்திரம்...

குற்றம் செய்து சிறையில் இருக்கும் கைதிகளுக்கு கொடுக்கப்படும் உணவை விட கொடுமையான உணவு, அடிப்படை வசதி மிக குறைவான தங்குமிடம்...

கழிவறையை சுத்தம் செய்து வசூல் செய்யும் மனிதரின் வியாபார துணுக்கம், கண் தெரியாத நடைபாதை வியாபாரியின் தன்னப்பிக்கை, ஊனமற்ற பிள்ளைக்கான குள்ளமான பிச்சைகாரரின் ஏக்கம், ஊனமான பிள்ளை பெற்ற அவரது மனைவியின் மகிழ்ச்சி...

தியாகராய நகரில் சட்டத்தை மீற... சட்டத்தின் உரிமையாளர்களுக்கு... அண்ணாச்சிகள் வழங்கும்... ஊதிய அல்லது கையூட்டு மற்றும் சலுகைப் பட்டியல்.

அண்ணாச்சிகளின் அரசியல் சட்டத்தின் படி காதல் குற்றம்...

அண்ணாச்சிகள் வேலையை விட்டு அனுப்பினால்... வேறு எங்கும் வேலை கிடைக்காமல் செய்வது... (இந்த ஒன்றில் எல்லா முதலாளிகளும் ஒற்றுமையாக இருப்பார்கள் போலும்)...

மனிதம் கொன்று... ஹயகிரீவா ஹோமம் செய்து கடவுளை காப்பாற்றுவதற்கு... 13 வயது பெண்ணை... நாய் கட்டும் இடத்தில் படுக்க வைத்த... பார்ப்பனர்கள்...
உன் தங்கை 8 ஊரை கட்டி ஆள்வாள் என சொல்லி விட்டு... அஸ்ஸாம் மாநிலத்தில் வேலைக்கு அழைத்து சென்றாலும் கூடுதல் சம்பளம் கொடுக்க மாட்டேன் எனும் மாமியின் திறமை...

சமூக அரசியல் பார்வையில் அணுகும் எனக்கு தோன்றியவை...

70-80 ஆண்டுகளுக்கு... காமராசரின் ஆளுகைக்கு முன்... பனை ஏறும் சாணர்களாக... கோயிலுக்கு அனுமதிக்கப்படாத மனிதர்கள்... காமராசரின் வழிகாட்டுதலுக்கு பின்... புலம் பெயர்ந்து... வசதியாகி அண்ணாச்சி ஆன பின் ... அவர்களின் சமூகத்தின் ஏழை எளிய மக்களையே... அடிமையாக... அதற்கும் கீழாக மனிதர்களாக கூட மதிக்காமல்... நடத்தும் அண்ணாச்சிகள் ஆட்டம் போடவா... காமராசர் வழிகாட்டி சென்றார்...

எளிய மக்களுக்காகவே போராடி சென்ற காமராசர்... இந்த அண்ணாச்சிகளின் ஆட்டத்தை காண வர வேண்டும்... வந்தால் என்ன சொல்வாரோ?

இளமையில் வறுமை... மிக கொடிய வியாதி... அந்த வியாதியை... தங்களுக்கு போதை மருந்தாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்... பண மற்றும் மன நோயாளிகளான அண்ணாச்சிகள்...