Tuesday, July 10, 2007

தமிழ் உணர்வுக்கு 85 வயது

1965 ஆம் ஆண்டு அப்போது நான் புலவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். திருவையாறு அரசர் கல்லூரி. தமிழ், வடமொழி இரண்டும் கற்பித்த கல்லூரி. வடமொழி பயில பேராசிரியர்கள் பெருமுயற்சி எடுத்து மாணவர்களைக் கூட்டி வருவர். எப்போதுமில்லாத அளவுக்கு தமிழ் படிக்க சில ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் வந்தனர்.
என் வகுப்பில் சுமார் 55 மாணவர்கள். அப்போதிருந்த கல்லூரி முதல்வருக்கு அதுவே மனவருத்தம். தமிழ் மாணவர்களுக்கு எப்போதும் பயமுறுத்தல்; இழிவான பேச்சு; அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்; 190 மாணவர்கள் மட்டுமே படித்த கல்லூரியில் 14 மாணவர்கள் வெள்யேற்றப்பட்டு சான்றிதழ்கள் பல்கலைக்கழக சிண்டிகேடுக்கு அனுப்பப்பட்டது.
தமிழகத்தின் தலைசிறந்த தமிழறிஞர்கள், அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்தும் பலன் இல்லை. அப்போது தமிழ்நாடு முழுவதும் டெங்குசுரம் பரவி வந்தது, பேராசிரியர் க.அன்பழகனுக்கும் அந்தக் காய்ச்சல். அவரைச் சந்திக்க முடியவில்லை.நாகை தமிழ் புலவர் கோவை. இளஞ்சேரனும் நண்பர் வீர. கோவிந்தராசனும் பேராசிரியரைப் பார்க்க வருகின்றனர். சுரத்திலிருந்து மீண்டு அன்றுதான் தலை முழுகித் துவட்டிக் கொன்டிருந்தார். கோவை இளஞ்சேரன் 14 மாணவர்கள் கல்லூரியை விட்டு நீக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறார். அதைக் கேட்ட பேராசிரியர் உடனே எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு பேரறிஞர் அண்ணா அவர்களைச் சந்தித்து இச்செய்தியைக் கூறுகிறார். எப்படியும் அந்த மாணவர்களை தொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் என்று துடிதுடித்துக் கூறுகிறார்.அண்ணா அவர்கள் இரா. செழியன் அவர்களை அழைத்து துணைவேந்தரிடம் பேச அனுப்புகிறார். துணை வேந்தர் உடனடியாக அம்மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆணையிடுகிறார். பேராசிரியர் மாணவர்களுக்கு தகவல் தந்து தொடர்ந்து படிக்க உதவி செய்கிறார். 14 மாணவர்களையும் கரந்தைப் புலவர் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளச் சம்மதிக்கிறார் அக்கல்லூரி முதல்வர். மாணவர்கள் தொடர்ந்து படித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் தமிழாசிரியர்களாக பணியாற்றினர்.
அப்படிப் படித்து சென்னையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களில் நானும் ஒருவன். நண்பர் வீர. கோவிந்தராசன் மற்றும் மு. வெள்ளைச்சாமி மூவரும் தற்போது ஒய்வு பெற்று சென்னையில் வாழ்கிறோம்.எங்கோ பாதிப்புக்குள்ளான தமிழ் மாணவர்களுக்காக உடல் நலனையும் பொருட்படுத்தாது உடன் உதவி செத் தமிழ் உணர்வுக்கு உரியவர் பேராசியர் க. அன்பழகன். அவர் 85 வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். அந்த இனமானக் காவலரின் பாதம் தொட்டு வணங்கி வாழ்த்துகிறோம்.
ஞானத்தேடல் சனவரி 2007 இதழில்... அதன் ஆசிரியர் நா.துர்க்காசெல்வம்.

1 comment:

Akilan said...

நல்ல பதிவு .