Saturday, March 29, 2008

தில்லையும், தமிழும்

தில்லைத் திருகோயிலில் திருமுறைகள் பாடுவதற்கு தடை என்பது போல் நடைபெறும் போராட்டம் மிகைப்படுத்தப்படுகிறது என்பதே உண்மையான ஆன்மீகவாதிகளின் கருத்தாக உள்ளது.

தில்லைக் கோயில் வழிவழியாக தில்லை வாழ் அந்தணர்களின் நிர்வாகத்தில்தான் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் திருகோயில்கள் பல சைவ - வைணவ திருமடங்களின் நிர்வாகத்தில்தான் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல திருகோயில்கள் வழிவழி (பரம்பரை) அறங்காவலர்களைக் கொண்டுதான் நடைபெற்று வருகின்றன. அத்திருகோயில்கள் இந்து அறநிலையத் துறை ஆணைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நிர்வாக அலுவலர்கள் அரசு - அரசு அலுவலர்கள் - அதன் நிர்வாகத்தில் தவறு நடைபெறாமல் இருக்க உதவி செய்து வருகின்றனர்.

தில்லைவாழ் அந்தணர்கள் இப்போது மட்டுமல்ல எப்போதும் எந்த அரசுக்கும் மேம்ப்பட்டவர்களாக தங்களை காட்டி கொள்வதும், பின் அரசின் அதிகாரம் பலம் வாய்ந்ததாக இருந்தால் பணிந்து போவதும் வரலாற்று செய்திகள்.

சோழர் காலத்திலும், காடவர் கோன் காலத்திலும் தில்லைவாழ் அந்தணர்கள் பணிந்து நடந்தும், பயந்து ஓடியும் உள்ளனர். அது பிறவி உயர்வு என்னும் பேதமையால் வளர்ந்த ஆணவம். சிலரின் பிடிவாதம் பெரும் விவாதமாக வித்திட்டவர்கள் அவர்களே.

திருகோயில்களில் தீப வழிபாட்டிற்கும் பின்னர் திருமுறை - திவ்யபிரபந்தங்கள் ஓதும் பழக்கம் எல்லா இடத்திலும் தடையேதுமின்றி நடைபெற்று வருகிறது. கருவறைக்கும் திருமேனி தீண்டுவாரும் அர்த்த மண்டபம் எனும் கருவறையை அடுத்த பகுதியில் வேதம், தமிழ் மறைகளை ஒதுவாரும் நின்று பாடி வருகின்றனர். அங்கெல்லாம் ஒழுங்காக நடைபெறுகின்றன. தில்லைவாழ் அந்தணர்கள் இந்த முறையை கடந்த 50 அல்லது 60 அண்டுகளாக மாற்றி திருமுறை பாடுவோரை சிற்றம்பல மேடைக்கு வெளியே அனுப்பி விட்டனர். அதுவே உரிமை பிரச்சனையாக உருவாகிவிட்டது.

தற்போது சிற்றம்பல மேடையில் திருமுறை பாடுபவர்களுக்கு இடம் அளித்து விட்டதால் இருதரப்பாரும் மனம் அமைதி அடைந்திருக்கலாம். எனினும் திருமுறைகளை முற்றிலும் போற்றி புகழ்கின்றவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றனர். இறைவனை வழிபட மொழி ஒரு தடையல்ல.தில்லைவாழ் அந்தணருக்கும் - திருவாரூரில் பிறந்தார்க்கும் ஒத்த மதிப்பையே திருதொண்டத் தொகையும் திருதொண்டர் புராணமும் வலியுளுத்துகின்றன.

தமிழ் ஞானசம்பந்தர் தம் தந்தை வட மொழியில் வேள்வி செய்ய பொருள் கொடுத்து உதவுகிறார். தம் தமிழ்மொழி வழிபாட்டை வலியுறுத்தவில்லை. உருத்திரம் பாடி முக்தி அடைந்தாரையும் ஒருவிதமான நடைமுறைகளும் அறியாத கண்ணப்பரையும் பெரியபுராணம் எடுத்துக் காட்டுகிறது. ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என அப்பர் பெருமான் படுகிறார்.

தமிழ் ஆர்வலர்களும் தம்மை ஏதோ வடமொழியின் வாரிசுகளாகக் கருதிக் கொண்டு வீட்டிலும் வெளியிலும் பேசுகின்ற மொழியை சிறுமைப்படுத்திக் கொண்டு வருகின்ற அந்தணர்களும் உண்மை நிலைதனை உணர்ந்து கொள்வதுதான் நல்லது.

தமிழ் மட்டுமே அறிந்து தமிழிலேயே பாடி வணங்குகிற 'மதுர காளியம்மன் திருகோயில், அங்காள பரமேஸ்வரி திருகோயில்' போன்ற இடங்களில் பரம வைதீகர்களான அந்தணர்கள் தங்கள் குல தெய்வ வணக்கத்தை தமிழ் பூச்சாற்றிகளைக் கொண்டு பயபக்தியுடன் வணங்குவதை இன்றும் காணலாம். பூச்சாற்றிகள் உள்ள தமிழ் திருகோயில்களில் ஆகமம் படித்த ஆகமவழியைப் பின்பற்றுகின்ற அந்தணர்களிடம் தமிழர்கள் எந்தவித தகராறுகின்றி ((உ-ம்) திருவேற்காடு - வடபழனி) வழிபட்டு செல்கின்றனர்.

ஆணவம் ஆன்மீகத்துக்கு எதிரி. ஆசைகள் பதிவியாசை, பண ஆசை எதுவாயினும் இறைவனுக்கு அருகே செல்ல விடாது என்பதே உண்மை.

ஞானத்தேடல் - 15 மார்ச் 2008 - பங்குனி இதழில் - அதன் ஆசிரியர் நா.துர்க்காசெல்வம்.

No comments: